One Nation One Election : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.! கட்சி தலைமை உத்தரவு.!

ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கம் என்பது தற்போது இந்திய அரசியல் வட்டாரத்தில் அதிகமாக ஒலித்து கொண்டு இருக்கிறது.  நாடாளுமன்றத்திற்கு இன்னும் 6 மாத காலத்தில் தேர்தல் வரவுள்ள்ளதால் , அதோடு சேர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் சட்ட மன்ற தேர்தலையும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது .

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அது சாத்தியப்படுமா என்பதை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. மேலும் வரும் 18ஆம் தேதி துவங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில் தான் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ள நிலையில் அங்கு விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா குறித்து  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படவில்லை.

இருந்தும் அவசர சட்டம் போல தாக்கல் செய்யப்பட்டால் அதனை திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க தவறமால் அனைவரும் விடுப்பு எடுக்காமல் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் என்பதால், அதற்கு நடாளுமன்ற உறுப்பினர்களில் 3இல் 2 பங்கு ஆதரவு தேவைப்படும். மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் இந்த சட்டம் நிறைவேற்ற அவர்களிடம் போதிய உறுப்பினர்கள் இல்லை. அதனால் , திமுக எம்பிக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் கொறடா உத்தரவு போல விதிக்கப்பட்டுள்ளது.