ஒடிசா ரயில் விபத்து : தமிழர்கள் பத்திரமாக இருக்கின்றனர்.! சென்னை திரும்பிய அதிகாரிகள் தகவல்.!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக இருக்கின்றனர். – சென்னை திரும்பிய அதிகாரிகள் தகவல். 

ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்தில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 900 பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று அதில் 382 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீதம் உள்ளவர்கள் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசின் துரித நடவடிக்கையின் பெயரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு ஒடிசா விரைந்தனர். இதில் அதிகாரிகள் குழு நேற்று தமிழகம் திரும்பினர்.

அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்ததில் 17 பேர் பயணிக்கவில்லை. மீதம் உள்ளவர்கள் அத்தனை போரையும் தமிழக காவல்துறை பத்திரமாக தமிழகம் கொண்டு வந்தனர். விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 6 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் நேரடியாக கவுண்டர் மூலம் டிக்கெட் எடுத்துவார்கள்.

அவர்கள் உடன் சென்ற சக பயணிகளிடம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தோம். ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தோர் மொத்தம் 382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் யாரும் தமிழர்கள் இல்லை. தமிழர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர். ஒரே ஒரு நபர் மட்டும் காயங்களுடன் தனியாக சென்னை வந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மற்ற விவரங்களை தமிழக முதல்வரிடம் விவரத்தை தெரிவிக்க உள்ளோம் என தமிழகம் திரும்பிய குழு தெரிவித்துள்ளது.