வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்! திமுக அரசுக்கு இது ஒரு வாய்ப்பு.. அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!

செயலிழந்த பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.

தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ் மக்களாகிய நாங்கள், “உலகம் ஒன்று” என்ற கருத்தை நம்புகிறோம், எங்கள் வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் கேவலமான வெறுப்பையும் ஆதரிக்கவில்லை.

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம் ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு தங்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர், அவர்களின் நலனை உறுதிப்படுத்த அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத் துறையில் புலம்பெயர்ந்த நமது சகோதர, சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொது மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர். வட இந்தியர்களைப் பற்றி திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துக்கள், திமுக அமைச்சர் அவர்கள் பானிபூரி வாலா என்று அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் அவர்களை வெளியேற்றக் கோருவது இன்று நாம் பார்ப்பதைத் தூண்டியுள்ளது.

திமுக மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை மக்களும், அரசும், காவல்துறையும் ஆமோதிப்பதில்லை. திமுக முன்பு செய்த விளைவு இப்போது அவர்களை மீண்டும் கடிக்க வருகிறது, இப்போது இந்த நிலையை சரிசெய்வது அவர்களின் பொறுப்பாகும், மேலும் அவர்களின் செயலிழந்த பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பாஜக துணை நிற்கிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு உறுதுணையாக இருந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment