நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை கண்டித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்த அந்த குறிப்பிட்ட மாணவர்கள் சின்னதுரையை பழிவாங்க எண்ணி மாணவன் வீட்டுக்கே சென்று மாணவனை அறிவாளால் பல இடங்களில் வெட்டி உள்ளனர். அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதிய ரீதியிலான தாக்குதல்கள் குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து, அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் மாணவச் செல்வங்கள் இவ்வாறு சாதிய ரீதியான பாகுபாடு காட்டிக்கொள்ளக்கூடாது என்றும், பாதிக்கப்பட்ட சின்னதுரையின் கல்லூரி செலவுகளை தான் அண்ணனாக ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வீடியோவை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்து உள்ளார். அதில் நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.

குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம்.

குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என அந்த டிவிட் பதிவில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.