MKStalin: சொல்வதைச் செய்வான் கலைஞர் மகன்… மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழாவில் முதல்வர் உரை!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, 13 பேருக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்கினார் முதலமைச்சர்.  தொகையை எப்படி கையாளுவது குறித்து திட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கையேடு வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தை தொடங்கி வைத்தபிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எனது அரசியல் பயணத்திற்கு மிகவும் முக்கியமான இடம் தான் காஞ்சி மாநகர்.

18 வயதில் அண்ணா சுடரை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்தேன். தற்போது தமிழ் சமுதாயத்தை மாற்றப்போகும் திராவிட சுடரை அண்ணா சதுக்கத்தில் இருந்து ஏந்தி காஞ்சி மாநகருக்கு கொன்றுவந்துள்ளேன்.  முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்றைக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற சிறப்புமிக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை அண்ணாதுரை தான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று அண்ணா கூறினார். அதுபோன்று, இன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள் என்றார்.

சொல்வதைச் செய்வான் கலைஞர் மகன் என்பதற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமே’ சாட்சி.  மகளிர் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை. இது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை. இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தது என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியம். தமிழ்நாடு அரசின் திட்டங்களை இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது.

இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை திமுக ஆட்சி செயல்படுத்தி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒரு சிலர் பொய் வதந்திகளை பரப்பி முடக்க நினைத்தனர். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என சிலர் கூறுகின்றனர். அறிவித்துவிட்டால் எதையும் நிறைவேற்றி காட்டுபவன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நிதி நெருக்கடி காரணமாக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை. தற்போது நிதிநிலை சற்று சரியானதும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

மதத்தின் பெயராலும், பழமையின் பெயராலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டன. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, அடிமையாக நடத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. பெண்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் இயற்கை சுழற்சியை கூட தீட்டு என கூறி முடக்கிவைத்தனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என கூறி பெண்களை முடக்கிவைத்தனர். உயர்வகுப்பு சேர்ந்த பெண்களும் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தனர்.

எனவே, பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிட மாடல். ஆண்களைவிட பெண்கள் நன்றாக படிக்கின்றனர். குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் பிற்போக்குவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்பதால் திமுக மீது சிலருக்கு கோவம் என கூறினார். மேலும், ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்துவதே திராவிட மாடல்.

உங்கள் கையில் உள்ள அட்டை உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் துருப்புசீட்டு. உங்கள் தம்பியாக, மகனாக இதனை பார்த்து பெருமைப்படுகிறேன்.  பெண்கள் முற்போக்காக  சிந்திக்க வேண்டும். நிறைய படிக்க வேண்டும். அப்போது தான் மொத்த நாடும் முன்னேற்றமடையும் என முதல்வர் உரையாற்றினார்.