நெய்வேலி கலவரம் : அரசியல் உள்நோக்கம் தான் காரணம்.! அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றசாட்டு.!

நெய்வேலி கலவரமானது அரசியல் உள்நோக்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் சுரங்க பாதை விரிவாக பணிக்காக மேல்வளையமாதேவி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சில தினங்களுக்கு முன்னர் என்எல்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டன. இதில் விளைநிலங்கள் சமன்படுத்தப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன.

நேற்று பாமக சார்பில் என்எல்சிக்கு எதிராக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பல காவலர்கள் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். நேற்று இந்த போராட்டத்தின் போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த என்எல்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மதுரையில் செய்தியாளர் மத்தியில் பேசினார். அப்போது என்எல்சி விரிவாக்கத்திற்கு பரவனாறு மாற்றுப்பாதை மிக முக்கியமானது. இதை செய்தால்தான் சுரங்கத்திற்கான மற்ற பணிகள் நடைபெறும். அப்போதுதான் மின்சார உற்பத்தி தடைபடாமல் இருக்கும். கடலூர் மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை அமைச்சர் மூலமாகவும் நில உரிமைதாரர்களிடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளது.

இதில் நிலத்தின் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2006 முதல் 2016 வரை 104 ஹெக்டர் பரப்பளவில் கூடிய 300-க்கும் மேற்பட்ட உரிமையாளர்களிடமிருந்து ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு நிலம் என்எல்சி நிர்வாகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 10 லட்சம் கருணை தொகை வழங்கப்பட உள்ளது.

இதே காலகட்டத்தில் எடுக்கப்பட்ட 83 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 400 நில உரிமைகளுக்கு ஏக்கருக்கு 2.6 லட்சம் தொகை போக மேலும் 14 லட்சம் ரூபாய் கருணை தொகை வழங்கப்பட உள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் முகாம் அமைத்து நில உரிமைதாரர்களுக்கு அவர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் என்எல்சிக்கு எதிராக சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து, அந்த போராட்டத்தை வன்முறையாக மாற்றியது கண்டணத்துக்குரியது. விவசாயிகள் நில உரிமையாளர்கள் இந்த பிரச்சனையை அமைதியாக அணுகினாலும், வெளியூரிலிருந்து வரக்கூடியவர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டதால், வன்முறை ஏற்பட்டு உள்ளது. இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது.

இந்த வன்முறையால் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஒரு பிரச்சனையை பேசி தான் தீர்வு காண முடியும். விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். வன்முறையை ஒருபோதும் அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டு பேசினார்.