செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜர்!

செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகியுள்ளார்.  2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டது. அதன்படி, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில், லோகநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த முறை விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 3 பேர் ஆஜராகவில்லை. செம்மண் குவாரி வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட கோபிநாத், ஜெயசந்திரன் உள்ளிட்ட 4 பேர் ஆஜராகியிருந்தனர். இதனால் வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தவகையில், செம்மண் குவாரி வழக்கில் இன்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகியுள்ளார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயசந்திரன், கோதைக்குமார், சதானந்தன் மற்றும் கோபிநாத் உள்ளிட்டோரும் ஆஜராகியுள்ளனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி ஆஜராகாததன் காரணம் குறித்து வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.