மமதை, ஆணவத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் மிரட்டல் – வைகோ கண்டனம் 

இந்தி மொழி விவகாரம் தொடர்பாக பேசிய வைகோ, மமதை, ஆணவத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் மிரட்டியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஆன்லைன் நடைபெற்றது. இந்த பயிற்சியில் வகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தில் இருந்து 37 பேர் பங்கேற்றனர். அப்போது, மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். அந்நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர்.

இதற்கு ராஜேஷ் கொடேஜா, எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்று கூறி, இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மமதை, ஆணவத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் மிரட்டியுள்ளார் என்றும் மத்திய அரசு இத்தகையை போக்கை கைவிட்டு ஆயுஷ் அமைச்சகம் செயலர் ராஜேஷ் வைத்தியாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.