பணிப்பெண் வழக்கு.! ஆண்டோ, மெர்லினாவுக்கு நீதிமன்ற காவல்.! சிறுமி அளித்த பேட்டி…

சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்த பல்லாவரம் திமுக எம்எல்ஏ ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர், தங்கள் வீட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு வந்த 17வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியதாகவும், சாதி பெயர் கூறி திட்டியதாகவும் புகார் எழுந்தன.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த அந்த சிறுமியிடம் நீலாங்கரை மகளிர் காவல்துறையினர் நேரடியாக சென்று வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் ஆண்டோ மற்றும் மெர்லினா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தை பாதுகாப்பு சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.! திமுக எம்எல்ஏ மகன், மருமகளை கைது செய்த தனிப்படை.! 

இதனை அடுத்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதே வேளையில், இந்த புகாரை அடுத்து தலைமறைவான ஆண்டோ மற்றும் மெர்லினா ஆகியோரை பிடிக்க நீலாங்கரை காவல்துறையினர் சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று அவர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து இன்று அதிகாலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்னர் ஆண்டோ மற்றும் மெர்லினா ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 9ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி தனது தயார் உடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அந்த சிறுமி கூறுகையில், நான் கடந்த 7 மாதங்களாக அவர்கள் வீட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்துள்ளேன். அவர்கள் துன்புறுத்தினாலும் நான் எனது வேலையை பார்த்தேன். அதற்கான ஊதியத்தை அரசு பெற்று தரவேண்டும். என் படிப்புக்கு அரசு இதனை செய்தால் கூட போதும். மேலும், எனது படிப்பு சான்றிதழ், மாற்று சான்றிதழ் ஆகியவை அவர்களிடம் உள்ளது அதனை அரசு வாங்கி தரவேண்டும்  என கோரிக்கை வைத்தார்.

சிறுமி தரப்பில் செய்தியாளர்களிடம் பேசிய நபர், 17 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அரசு அரசு இழப்பீடு பற்றி அறிவிக்கவில்லை. சிறுமியின் படிப்பு செலவு பற்றி அரசு அறிவிக்க வேண்டும் எனவும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரையில் ஆண்டோ மற்றும் மெர்லினாவுக்கு பிணை வழங்க கூடாது எனவும் கோரிக்கை வைத்தார்.