ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் சிலை… பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.!

ஜி-7 உச்சி மாநாட்டிற்கு மூன்று நாள் பயணமாக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைக்கிறார்.

ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு செல்கிறார். ஏற்கனவே குவாட் தலைவர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஜி-7 உச்சிமாநாட்டில் குவாட் முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரதமர் மோடி, ஜி-7 மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறிய அவர், மாநாட்டில் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் சவால்கள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

ஜப்பானில் ஆகஸ்ட் 6, 1945 இல், ஹிரோஷிமா உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலை சந்தித்தது, இதில்  கிட்டத்தட்ட 140,000 மக்கள் பலியாகினர். அடுத்தபடியாக 2 நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9 அன்று அமெரிக்கா, ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது “ஃபேட் மேன்” எனும் மற்றொரு குண்டை வீசியது, இது 75,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது.

உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி மற்றும் பிற உலகத் தலைவர்கள் ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவிடத்திற்குச் சென்று போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அகிம்சையால் மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும் என்று நம்பிய மகாத்மா காந்தியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் ஜி-7 மாநாட்டை முன்னிட்டு ஜப்பானிற்கு வருகை தந்துள்ளனர், அவர்கள் ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவிற்கு இன்று வந்துள்ளனர். ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில், அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.