பெரியார்-அம்பேத்கர் வழியில் சமூக மாற்றத்திற்கான பாதையில் இணைந்து பயணிப்போம்… ரஞ்சித்துக்கு உதயநிதி நன்றி.!

மாமன்னன் படத்தைப் பாராட்டிய பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் பதில் ட்வீட்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், லால், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய இயக்குனர் ரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சமூகநீதி பற்றி எடுத்துரைக்கும் இந்த மாமன்னன் திரைப்படத்தில் இருந்து, உதயநிதி சாதிப்பாகுபாட்டை களைவதற்கான வேலையை ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம், மாமன்னன் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, நமது கழகம் தொடர்ந்து மக்களிடையே பரப்புரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பராசக்தி படத்தில் தொடங்கி மாமன்னன் திரைப்படம் வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறோம்.

ஒரே திரைப்படத்தின் மூலம் சமூக மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது. பெரியார், அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடுவதன் மூலம், மாற்றத்தை கொண்டுவர முடியும், அவ்வழியில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இந்த பயணத்தில் என்மீதும், கழகம் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள ரஞ்சித்துக்கு நன்றி என உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.