இஸ்ரேல் போர் எதிரொலி: ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது, நேற்று காசா பகுதி வழியாக  பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், அங்கு போர் தீவிரமடைந்துள்ளதால், ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், ஜெருசலம் சென்றுள்ள பாதிரியார்கள் நலமுடன் இருந்தாலும், ஜெருசலம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம், இந்திய தூதரகம் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 15 தமிழர்கள் வசிப்பதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அயலக தமிழர் நலவாரியம் கூறியுள்ளது.