இன்டெல் இந்தியா தலைவர் நிவ்ருதி ராய்…29 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா.!

இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நிவ்ருதி ராய், 29 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்துவந்த நிவ்ருதி ராய், தனது 29 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ராஜினாமா செய்து, இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தில் தலைமை பதவி ஏற்கவுள்ளார். முதலீட்டு நிதி நிறுவனமான இன்வெஸ்ட் இந்தியாவை வழிநடத்த நிவ்ருதி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்வெஸ்ட் இந்தியா அமைப்பின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபக் பாக்லா, பதவியில் இருந்து விலகிய பிறகு அவரிடமிருந்து நிவ்ருதி ராய் தலைமை பதவி ஏற்கவிருக்கிறார். இன்டெல் நிறுவனம் நிவ்ருதி ராய் வெளியேறுவதை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

1994 இல் இன்டெல்லில் டிசைன் இன்ஜினியராக சேர்ந்த, நிவ்ருதி ராய் 2005ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் உள்ள இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதன்பின் இன்டெல் இந்திய அலுவலகத்திற்கு மாற்றமாகி, 2016 முதல் இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.