அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம்!

நேற்று (ஆகஸ்ட் 2) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தற்போதைய நேரத்தில் சனாதானத்தை எதிர்ப்பதை காட்டிலும் சனாதனத்தை ஒழிப்பதே சிறந்தது என்றும், டெங்கு, மலேரியா, கொரோனா, போன்ற தொற்று நோய்களை எதிர்க்க மக்கள் போராட மாட்டார்கள், அவற்றை ஒழிக்கத்தான் செய்வார்கள். அது போல தான் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது ஒன்று என பேசி இருந்தார்.

தற்போது, அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமித்ஷா பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசுகையில், கடந்த இரண்டு நாட்களாக வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக “இந்தியா” கூட்டணி சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறது. மக்களின் இதயங்களில் சனாதன ஆட்சி உள்ளது, அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும், ராமர் கோயில் திறப்பை “இந்தியா” கூட்டணியால் தடுக்க முடியாது என்று ராஜஸ்தானில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.