GangMan: முதலமைச்சர் தொகுதியில் போராட்டம் நடத்திய 800 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொகுதி கொளத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘கேங் மேன்’ எனப்படும் களப்பணியாளர்கள் பணியிடத்துக்கான தேர்வில் சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 15,000 பேர் பங்கேற்றனர்.

இதில், பெரும்பாலானவர்களுக்கு பணி வழங்கப்பட்ட நிலையில் சுமார் 5,400 பேருக்கு பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இவர்கள் விடுபட்டவர்கள் என்ற வகையில், இதுவரை பணி வழங்காமல் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இவர்களுக்கு பணியிடம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அரசு மீது விரக்தியில் இருந்த அவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை முழுக்க போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை முதல்வரின் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதன்பின்னர் பலர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக போலீஸார் அப்புறப்படுத்தினர்.

தங்களுக்குப் பணி வழங்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் தொகுதி கொளத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.