ஜப்பான் முதல் ஆஸ்திரேலியா வரை… பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வரும் மே 19 முதல் 24-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். மே 19 முதல் 21 வரை ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்குச் செல்லும் மோடி,ஜி7 மேம்பட்ட பொருளாதாரங்களின் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார், அதில் அவர் உணவு, உரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் பயணத்தை முடித்துவிட்டு மோடி,  பப்புவா நியூ கினியாவில் உள்ள போர்ட் மோர்ஸ்பிக்கு மே 22 அன்று செல்கிறார். அங்கு  இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (FIPIC) மூன்றாவது உச்சிமாநாட்டை பிரதமர் ஜேம்ஸ் மராப்புடன் இணைந்து  நடத்துகிறார்.

அதன் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி,  அங்கு சிட்னி நகரில் நடைபெறும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தலைமையில் நடைபெறும் அந்த குவாட் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், 23-ஆம் தேதி பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிசுடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பிறகு, சிட்னி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.