மகளிருக்கான இலவச பயண திட்டம் இனி “விடியல் பயண” திட்டம்! – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்ற உடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்படி, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது. நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இலவசப் பேருந்து பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.888 சேமிப்பதாக ஆய்வில் தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், நாட்டின் 77வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை  கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர்.

இதன் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு “விடியல் பயணம்” என்று பெயர் சூட்டப்படுகிறது என அறிவித்தார். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர், பல்வேறு தரப்பு மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகளில் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டத்தின்கீழ் தினசரி 50 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர்.

இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.850 மேல் சேமிக்க முடிகிறது. நாட்டின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிட முடியும். இதனால் நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் மகளிருக்கான இலவச பயண திட்டம் இனி விடியல் பயண திட்டம் என்று அழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.