விடியல் பயணம்.. நல வாரியம்.. மாநில பட்டியலில் கல்வி.. காலை உணவு திட்டம்.! முதலமைச்சரின் விரிவான சுதந்திர தின உரை.!

77வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து, மாநில முதல்வர்கள், மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்ற உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு, கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் கூறுகையில், 77வது சுதந்திர ஆண்டை இந்தியா துவங்கியுள்ளது. இந்தியாவின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு. செம்மொழியான தமிழ் மொழியை தாயாக கொண்ட தமிழ்நாடு, முன்னதாக சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம் , மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்து, பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது தான் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது.

சென்னை மாகாணத்தில் இருந்து தமிழை தவிர மற்ற மொழி பேசுபவர்கள் பிரிந்து சென்ற பின்னர் பெயரை மாற்றாமல் ஏன் இருக்க வேண்டும். தமிழ்நாடு என பெயர் வைக்காமல் நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என கேட்டவர் தந்தை பெரியார்.

மக்காளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றிவைக்கும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம். நவீன தமிழகத்தின் சிற்பி கலைஞர் கருணாநிதி. அவரது நூற்றாணடை போற்றுவது என்பது தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றுவதாகும்.

1962ஆம் ஆண்டு சீனாவால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வந்த போது, அப்போதைய பிரதமர் நேருவுக்கு துணை நின்றவர் பேரறிஞர் அண்ணா. 1971ஆம் பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்திய போது மாநிலங்கள் எல்லாம் 25 கோடி ரூபாய் நிதி திரட்டி அனுப்பியது. அதில் தமிழகத்தின் பங்காக 6 கோடி ரூபாய் அளித்தார் கலைஞர் கருணாநிதி. 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது, வாஜ்பாய் அரசுக்கு 3 தவணையாக 50 கோடி ரூபாய் வழங்கினார் கலைஞர் கருணாநிதி.

காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டுள்ளது. கிண்டி காந்தி மண்டபத்தில் கட்டபொம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் சிலை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ளது. விடுதலை போராட்ட வீரர்களின் சிலை அவர்களின் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகள் சிலை சென்னை அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

விடுதலை போராட்ட வீரர்கள் 195 பேருக்கு கடந்த ஆண்டு முதல் ஓய்வூதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக கடந்தாண்டு வழங்கப்பட்ட நிதி இந்தாண்டு 11 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு “விடியல் பயணம்” என்று பெயர் சூட்டப்படுகிறது என்றும் நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆக.25 முதல் மாநில முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். மாணவர்களின் உடல்நலன், மன வலிமையை காத்திடும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார். கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளேன் என்றும் இந்த திட்டத்திற்காக இந்தாண்டு ரூ.404 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஓலா, உபேர், ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி பல்வேறு நகரங்களிலும் ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கி வருகின்றனர்.

நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார்.  மேலும், ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்றும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆக.25 முதல் மாநில முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். என்றும் இந்த திட்டத்திற்காக இந்தாண்டு ரூ.404 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மாநில பட்டியலில் கல்வி இணைக்கப்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் தான் நீட் போன்ற கொடூர தேர்வை அகற்ற முடியும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடுத்த மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட இருக்கிறது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.