ஊர்க்குருவி உயர பறந்தாலும், பருந்தாகாது… அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை – செல்லூர் ராஜு பேட்டி!

மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த சமயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணைந்த போது கசக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஷக்கிருமிகள் இருக்கிறார்கள்:

பாஜகவினரிடம் சகிப்புத்தன்மை இல்லை, கூட்டணி கட்சியை என்கிற பெயரில் தோலில் உட்கார்ந்து கொண்டு காதை கடிப்பதை அண்ணா திமுக என்றும் பொருத்து கொண்டு இருக்காது. ஒரு காலத்தில் பாஜக என்றால் மதிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு பாஜகவில் தகுதியற்றவர்கள், விஷக்கிருமிகள் இருக்கிறார்கள் என்பது தான் இதன்மூலம் தெரிய வருகிறது.

வாயடக்கம் தேவை:

இவர்களை எல்லாம் அடக்கி வைக்க வேண்டியவரும் வாய்க்கொழுப்பாக பேசுகிறார். மத்தியில் ஆளுகின்றோம் என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ளக் கூடாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை, ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது, பாஜகவினருக்கு இதை ஏற்க ஜீரண சக்தி இல்லை, ஊர்க்குருவி உயர பறந்தாலும், பருந்தாகாது.

மோடியா?.. லேடியா?:

மோடியா?.. லேடியா?.. என்று இருந்தபோதும் கூட லேடி தான் என தமிழகத்தில் முடிசூட்டினார். தனித்து நின்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அம்மையார். யாராலும் ஜெயலலிதாபோல் ஆக முடியாது, சிலர் மூன்று பட்டம் வாங்கிவிட்டால், தன்னை பெரிய ஆள் என நினைத்து கொள்கிறார்கள் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரிக்கின்ற அளவுக்கு, பஜகவினர் தரம் தாழ்ந்து போய்விட்டனர் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment