பாஜக குறித்து யாரும் விமர்சிக்க கூடாது.! கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட எடப்பாடி பழனிசாமி.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக தலைவர்களை அண்மைகாலமாக அவ்வப்போது விமர்சித்து வந்திருந்தார். தங்கள் கட்சி தலைவர்களை பொதுவெளியில் அதுவும் கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவரான அண்ணாமலை விமர்சிப்பதை அதிமுக மூத்த நிர்வாகிகள் எதிர்த்து, கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.

இருந்தும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் கூறிய கருத்துக்களில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று மீண்டும் கூறினார். குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் செய்தவர் என கூறியதாகட்டும்,  மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை  கூறியதாகட்டும், எடப்பாடி பழனிச்சாமி பற்றிய விமர்சனம் என அண்ணாமலை தொடர்ந்து தனது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

இவ்வாறு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி கட்சியில் இருக்கும் தலைவர்களை விமர்சிக்கும் போக்கு அதிமுகவினர் மத்தியில் தொடர் எதிர்ப்புகளை பெற்று வந்தது. இது தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தேசிய தலைமையை சந்தித்து முறையிட்டும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

இதனை தொடர்ந்து தான், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவில், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது என்று அதிகாரபூர்வமாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல , 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், இதனால் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்றும் எடப்பாடி பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் , கூட்டணி முறிந்து விட்டதால் யாரும் பாஜகவை கடுமையாக விமர்சிக்க கூடாது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.