DMKMPs: முதலமைச்சர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள்  எவ்வாறு செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டிய கருத்துகள் தொடர்பான அறிவுறுத்தல்களை  நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கி 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, சிறப்பு கூட்டத்தொடருக்கு முன்பு நாளை நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்த சிறப்பு கூட்டத்தொடரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிநிபந்தனைகள், பதவிக் காலம்) மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் மற்றும் பாரத் என்ற பெயர் மாற்றம் என  மசோதாக்கள் குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.