தமிழகத்தில் டெங்கு பாதிப்பு.. தடுப்பு நடவடிக்கைகள்.. அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி.!

பருவமழை காலங்கள் வரும்போதே அது தொடர்பான காய்ச்சல், சளி போன்ற நோய்கள் வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தி வரும். அதே போல டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் இன்று பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார் .

அவர் கூறுகையில், டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசு உற்பத்தியை தடுக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தபடுகின்றன. தமிழகம் முழுவதும் டெங்கு மாதிரி அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன. டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தமிழக அரசு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 2.65 லட்சம் டெங்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதே போல, இந்தாண்டு இம்மாதம் (செப்டம்பர்) வரை 2,41,743 பேரிடம் டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கொசு உற்பத்தியை தடுக்க 16,005 புகை எந்திரங்கள்செயல்பாட்டில் உள்ளன.  65,760 லிட்டர் கொசு ஒழிப்பு பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை டெங்குவை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 318 மருத்துவ அலுவலர்கள் உள்ளனர். 635 செவிலியர்கள் , 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2324 ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தமாக 4231 பணியாளர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி ஆண்டு என கணக்கிட்டால், கடந்த 2012ஆம் ஆண்டு 13,204 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டது அதில் 66 பேர் உயிரிழந்தனர். அதே போல, 2017ஆம் ஆண்டு 23,294 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது.

டெங்கு பாதிப்புகள் குறித்தும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகர்ப்புற உள்ளாட்சி துறை ஆகிய துறைகள் ஒன்றாக இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

பல்வேறு துறை செயலாளர்கள் உடன் தலைமை செயலாளர் அண்மையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். சுகாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்கள் , ஊழியர்கள் என 500 பேர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து நமது துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என தமிழக்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.