சிகிச்சையில் இருக்கும் நாட்கள் நீதிமன்ற காவல் ஆகாது – ஐகோர்ட் நீதிபதி

மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என நீதிபதி சக்கரவர்த்தி தீர்ப்பு.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று கூறி, அவரை நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என கூறி, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்தனர். ஆட்கொணர்வு வழக்கை 3வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டது. 3வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பே செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது. சிறையில் உள்ள மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறலாம். உடல்நலம் சரியான பிறகு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கலாம். மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். அதாவது, சிகிச்சை முடிந்தபின் சிறை மாற்றம் அல்லது அரசு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கலாம் எனவும் நீதிபதி சக்கரவர்த்தி கூறியுள்ளார்.