ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியர்கள் ஆய்வு செய்ய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும், பொது மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் முதுகெலும்பாக திகழ்கின்றது. இச்சேவையை தடையில்லாது வழங்கவும், நல்ல தரமான மருத்துவ சேவை வழங்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்வது முக்கிய கடமையாகும்.

இந்த ஆய்வுகளினால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைத்திடவும், இந்நிலையங்களில் நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், துணை செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிப்புற நோயாளிகள் பதிவேட்டை ஆய்வு செய்தல், இம்மருத்துவ நிலையங்களில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தரப்படும் மருத்துவ சேவை, பிரசவங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கண்காணித்தல், கருத்தடை திட்டங்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றிய விவரத்தை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.