தபால் வாக்குக்கு கூடுதல் அவகாசம்… 17ம் தேதி மாலை 6 வரை பரப்புரை – சத்யபிரதா சாகு

Election2024: தபால் வாக்கு செலுத்துவதற்கு நாளை ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஒருவாரமாக தமிழ்நாட்டில் பூத் சிலிப் விநியோகம் செய்தல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்களிடம் தபால் வாக்கு பெறுதல், வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை தமிழ்நாட்டில் ரூ.460 கோடி மதிப்புள்ள ரொக்கம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.53 கோடி ரொக்கம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜிஎல் மூல இதுவரை 4100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 92.80% வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பூத் சிலிப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என புகார் வந்துள்ளது. பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தெரிவித்தார்.

அதேசமயம், படிவம் 12-ஐ பூர்த்தி செய்து வழங்கிய அரசு ஊழியர்களுக்கு வாக்கு சீட்டுகள் வரவில்லை எனவும் புகார் வந்துள்ளதாக தெரிவித்தார். தபால் வாக்கு செலுத்துவதற்கு நாளை 5 மணிவரை ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியும், இதுபோன்று தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் தபால் வாக்களிக்க நாளை கடைசி நாளாகும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் 17ம் தேதி மாலை 6 வரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார். ஏற்கனவே மாலை 5 மணியுடன் பரப்புரை முடியும் நிலையில், தற்போது கோடை காலம் என்பதால் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் விதியை மீறி அண்ணாமலை பரப்புரை செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதான புகார் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் இரவு 10 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.