அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன் மற்றும் ரகுபதி மீது பதிவான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் சென்றதாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி மற்றும் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போதும் அதிமுக – திமுக இடையே நடந்த மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்தனர். 2016 தேர்தலின்போது சிவகங்கையில் அதிமுக – திமுக இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுபோன்று 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அமைச்சர் ரகுபதி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை றது செய்து ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.