#BREAKING: காவிரி நதிநீர் விவகாரம்..! உச்சநீதிமன்ற புதிய அமர்வு அறிவிப்பு..!

காவிரி நதிநீர் பங்கீடுத் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரும் மனுவை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை அமைப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி அளித்தார். இந்நிலையில் காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வை காவிரி வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இதற்கு முன்னதாக, இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார்.

தமிழ்நாடு அரசின் முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, புதிய அமர்வு அமைக்கப்படும் என அறிவித்தார். கர்நாடக அரசு தன் தரப்பு வாதங்களை முன் வைக்க முயன்றபோது புதிய அமர்வில் வாதிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் இந்த அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வழக்கு 57 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் புதிய அமிர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.