#BREAKING: கர்நாடக தேர்தலில் இருந்து விலகியது அதிமுக!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வேட்மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடாமல் விலகியுள்ளது அதிமுக. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்கான, வேட்புமனு தாக்கல் முடிந்து, இன்று வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் 3 தொகுதிகளுக்கும், இபிஎஸ் ஒரு தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்தனர்.

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில், புலிகேசி நகர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்திருந்தார் இபிஎஸ். இதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து, இரட்டை இலை சின்னமும் அவர்கள் வசமானது.

இது ஓபிஎஸ்க்கு பின்னடைவாக இருந்தது. இந்த சமயத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. அதிமுகவின் பெயர் பாதிக்கப்பட கூடாது என்பது காரணமாக மீதமுள்ள 2 தொகுதி வேட்பாளர்களையும் வாபஸ் பெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று அறிவித்திருந்தது.

மறுபக்கம், புலிகேசி தொகுதியில் இபிஎஸ் ஆதரவாளர் அன்பரசன் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால், பாஜகவை எதிர்த்து அதிமுக கர்நாடகத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், புலிகேசி தொகுதியில் இபிஎஸ் ஆதரவாளர் அன்பரசன் வேட்புமனு வாபஸ் பெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர் அன்பரசன் அவர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான D. அன்பரசன் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வேட்மனுவை வாபஸ் பெற்றதால், போட்டியிடாமல் விலகியுள்ளது அதிமுக.