Anna medals: அண்ணா பிறந்தநாள் – 127 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணை!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்.15ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக  பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழக மக்களை கவர்ந்த மாபெரும் அரசியல் தலைவர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நாளை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்தாண்டும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில், காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்களுக்கு பதக்கம் வாங்கப்பட உள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 8 பேர், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பேர், ஊர்க்காவல் படையில் 4 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், தடய அறிவியல் துறை பிரிவில் 2 பேர் மற்றும் அறிவியல் அலுவலர் ஆகியோருக்கும் அண்ணா பதக்கங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், ராமநாதபுரம் தீவிர குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.ஐ. கே.நவநீத கிருஷ்ணனுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.