பொது சிவில் சட்டத்திற்கு பாமக எதிர்ப்பு.. சட்ட ஆணையத்திடம் கருத்துக்களை சமர்ப்பித்த அன்புமணி ராமதாஸ்!

பொது சிவில் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பாமக எதிர்ப்பு.

தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும்.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும். அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என 22-வது சட்ட ஆணையத்திடம் பாமக சார்பில் கருத்துக்களை சமர்ப்பித்தார் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பொது சிவில் சட்டம்  என்ற பெயரில் எந்த ஒரு மதத்தினர் உரிமைகளும் பறிக்கப்படுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒவ்வொரு மத பிரிவினரின் பாரம்பரியத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும். பல்வேறு மத பிரிவினரின் சிவில் உரிமைகளில் மத்திய பாஜக தலையிட கூடாது என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய பாஜக.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை எனவும் பாமக தெரிவித்துள்ளது. பொது சிவில் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பாமக எதிர்ப்பு தெரிவித்து, சட்ட ஆணையத்திடம் தனது கருத்துகளை சமர்ப்பித்துள்ளது.