ADMK vs BJP: எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.! செல்லூர் ராஜு பேட்டி.!

மதுரை பாஜக மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் உள்ளிட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் செல்லூர் ராஜு முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தனர். அதில், மதுரை மாவட்ட துணை தலைவர், இளைஞரணி தலைவர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவின் இணைந்தனர்.

இதன் பின் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜக – அதிமுக இடையே பிரச்சனை என கூறினோமா? அண்ணாமலை சொன்ன விதம் தான் தவறு என கூறினோம். அண்ணா குறித்து பேசிய கருத்துக்களை தவறு என்றுதான் சொன்னோம். அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.  அண்ணாமலை இப்படி பேசுகிறாரே என்ற வருத்தத்தையே பதிவு செய்தோம், வேறு எதுவும் இல்லை.

அண்ணாமலை நடைபயணம் செல்லட்டும், கட்சியை வளர்க்கட்டும், அதில் எங்களுக்கு கவலை இல்லை என்றார்.  மோடி ஜி, அமித்ஷா ஜி, ஜேபி நட்டா ஜி உள்ளிட்டோர் எங்கள் பொதுச்செயலாளரை மதிக்கிறார்கள், எங்களையும் மதிக்கிறார்கள். அது போதும். மோடியே அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று நாங்களும் தான் நினைக்கிறோம்.

அதே போல் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்று பாஜக அறிவிக்க வேண்டும் என பாஜகவோடு கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், கூட்டணி தொடர்வதாக செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுகவின் அவைத்தலைவராக ஒரு இஸ்லாமியரை எடப்பாடி பழனிசாமி அமர வைத்துள்ளார். அதேபோல, சனாதனம் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.