சுங்கக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – டிடிவி தினகரன்

கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்ட முடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. இவைகளில் திருச்சி, சமயபுரம், திருப்புராயத்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமாக நடைமுறைதான் என தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், கொரோனா பேரிடரைத் தொடர்ந்து 5 மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்கக் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது மக்களை மேலும் வேதனைப்படுத்தவே செய்யும். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும். இன்னும் சொல்லப்போனால், கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்ட முடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.