2024 கூட்டணி ஆட்சி தான்.. தெலுங்கானா முதல்வர் கருத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்.!

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று அடுத்த 4வது நாளான டிசம்பர் 3ஆம் தேதி தெலுங்கானா உட்பட, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம் என 5 மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

5 மாநில தேர்தல் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. தெலுங்கானா தேர்தல் பிரச்சாரம், நிஜாமாபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், நீங்கள் (மக்கள்) கவனமாகக் கேளுங்கள். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆட்சி அமையாது.

வளர்ந்த இந்தியாவில் 4 முக்கிய தூண்கள்… பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இலக்கு – பிரதமர் மோடி பேச்சு

2024இல் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அப்போது அதில் அனைத்து கட்சி எம்பிகளும் இருப்பர். நாம் (தெலுங்காளவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி) அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், மத்தியில் நம் பலத்தை காட்ட முடியும். பிராந்திய கட்சிகளின் ஒருங்கிணைப்பு மத்திய ஆட்சியில் இருக்கும் என பி.ஆர்.எஸ் கட்சி தலைவரும் தெலுங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இன்று நிஜாமாபாத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகையில், 2024ல் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார். வரும் சட்டமன்ற தேர்தலில் 2023லேயே இங்கு யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2024ல் பாஜக தான் ஆட்சிக்கு வரும். உங்கள் கட்சியும் உங்கள் குடும்பமும் தோற்கப் போகிறது என கடுமையாக விமர்சித்தார்.

தெலுங்கானாவில், ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும் பிரதான போட்டி நிலவுகிறது. 3வது முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தெலுங்கானாவில் பாஜகவும் தங்கள் பலத்தை நிரூபிக்க போராடி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.