நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.. 6வது நபர் அதிரடி கைது.!

கடந்த புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இரண்டு பேர் மக்களவையில் குதித்து வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி கோஷமிட்டனர். அதே போல நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கோஷமிட்டனர். இதனை அவர்களது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார். அவர் தப்பிக்க இன்னொரு நண்பர் உதவி செய்தார் என மொத்தம் 6 பேர் இந்த வழக்கில் இதுவரை கைதாகியுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 22ஆம் ஆண்டு  பாராளுமன்ற தாக்குதல் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்வையிட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா கையெழுத்திட்ட அனுமதிநுழைவு சீட்டோடு உள்ளே வந்திருந்தனர். அவர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்து வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

நாடாளுமன்ற அத்துமீறல்.. முக்கிய ஆதாரங்களை எரித்த லலித்.? தீவிரமடையும் விசாரணை.!

 அதே நேரத்தில் வெளியில் ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளியிட்டு கோஷமிட்டனர். அதனை லலித் என்பவர் இந்த சம்பவங்களை படம்பிடித்தார். சம்பவத்தன்று லலித்தை தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் லலித் அடுத்த நாள் டெல்லி மத்திய பகுதி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதன் பிறகு அவரும் டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதில் சம்பத்தன்று லலித் டெல்லியில் இருந்து தப்பிக்க உதவி அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக மகேஷ் குமாவத் என்பவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் தப்பிக்க உதவியதாக கூறப்பட்ட மகேஷ் குமாவத் இன்று டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் சிறப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகேஷ் குமாவத் மீது சாட்சியங்களை அழித்தல் மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டின் பேரில் புகாரில் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.