தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் மீட்டர் – டெண்டர் வெளியிட்ட மின்சார வாரியம்!

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கு மின்சார வாரியம், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் புதிய டெண்டர் கோரியது.

தமிழகத்தில் தற்போது அனைவரது வீடுகளிலும் டிஜிட்டல் மீட்டர் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் மின் உபயோகம் கணக்கிடப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருக்கிறது. இதில், மின் கணக்கீடும் பணியில் குளறுபடி ஏற்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், புதிய ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்காக  பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. இந்த ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டுக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தப்படும் நடைமுறை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஜூன் மாதம் விடப்பட்ட ஒப்பந்த புள்ளியில் பங்கேற்ற நிறுவனங்கள் சந்தேகங்களை முன்வைத்ததால் அதனை, மின்வாரியம் ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு புதிய டெண்டரை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து இணைப்புகளில் பொருத்தும் வகையில் ஒரே கட்டமாக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தேர்வாகும் நிறுவனத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. அதில், 10 ஆண்டுக்கு மீட்டர்களை பொருத்துதல், தகவல் தொடர்பு வசதியை பெருக்குவது, ஒருங்கிணைப்பு, பராமரிப்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என பல்வேரு நிபந்தனைகளை விதித்துள்ளது மின்சார வாரியம்.