TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ…

சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (இரண்டாவது நாள்) உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. கடந்த 2 நாள் மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் உடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் மாநாட்டில் இதுவரை பல்வேறு நிறுவனங்களுடன் 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக 14.54 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  நேரடி மற்றும் மறைமுகம் என 26.90 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ரூ.6.64 லட்சம் கோடி… முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி – முதலமைச்சர் உரை!

சென்னையில் நடைபெற்ற இரண்டாவது நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான சில முக்கிய நிறுவனங்கள் பற்றியும் , அதன் மூலம் தமிழகத்தில் உருவாகியுள்ள புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை விவரங்கள் பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்….

  • தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க 36,238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை சார்பில் 1070 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • கள்ளக்குறிச்சியில் புதிய காலணி ஆலை துவங்கப்பட உள்ளது. 2302 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
  • விழுப்புரத்தில் 500 கோடிரூபாய் முதலீட்டிலும், பெரம்பலூரில் 48 கோடி ரூபாய் முதலீட்டிலும் புதிய காலணி ஆலைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • அதானி குழுமத்தின் எரிசக்தி துறை சார்பில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • அதானி குழுமத்தின் தொலைத்தொடர்புத்துறை சார்பாக 13,200 கோடி ரூபாய் செலவில் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • அதானி எனர்ஜி  சார்பில் 24,500 கோடி ரூபாய்க்கு முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • சிபிசிஎல் நாகப்பட்டினத்தில் புதிய பெட்ரோலியம் ஆலை அமைக்க 17 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • ஹிட்டாச்சி நிறுவனம் சார்பாக 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • மஹிந்திரா நிறுவனம் சார்பாக 1800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • L & T நிறுவனம் சார்பாக ஐடி நிறுவனம் அமைக்க 3500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • காவேரி மருத்துவமனை சார்பாக பல்நோக்கு மருத்துவமனை அமைக்க 1200 கோடி ருபாய் அளவில் முதலீடு செய்யப்பட உள்ளது.
  • டாடா நிறுவனத்தின்ரசாயன தொழிற்சாலை ராமநாதபுரத்தில் அமைக்க 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்.
  • ராயல் என்பீல்டு நிறுவனம் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் அமைக்க 3000 கோடி ரூபாயில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் 2,740 கோடி ரூபாய் செலவீட்டில் சென்னையில் டேட்டா தளம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.