கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதைப்போல, இந்த வெடிவிபத்தில் 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, சரக்கு வேனில் இருந்து குடோனுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இடம் மாற்றியதால் விபத்து ஏற்பட்டது எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து, விபத்தை ஏற்பட்டதை தொடர்ந்து,  வெடி விபத்து ஏற்பட்ட இந்த  கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,  வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.12 லட்சம் ரொக்கமாக ரூ.50 ஆயிரமும் காசோலையாக ரூ.11.50 லட்சம் என உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் நேரில் சென்று வழங்கப்பட்டது. 

மேலும், இந்த வெடி விபத்து குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே, இந்த வழக்கில் நேற்று  சேதுராமன் என்பவர் கைதான நிலையில், தற்போது தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.