தக்காளி வரத்து அதிகரிப்பு: ரேஷன் கடைகளில் விற்பனை நிறுத்தம்!

கடந்த சில மாதங்களாக தக்காளி விலை பெட்ரோல் விலைக்கு போட்டியாக விற்கப்பட்டு வந்தது. வெளிமாநிலங்களில் தக்காளி வரத்து குறைவாக இருந்ததாலும், மழை காரணமாகவும், தக்காளி விலை கடும் உச்சத்தில் விற்கப்பட்டது.

இந்நிலையில், தக்காளி விலை உச்சத்தில் இருந்ததால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டது. தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது.

விலை குறைந்ததால் அனைத்து ரேஷன் கடைகளில் தாக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பண்ணை பசுமை கடைகளில் கிலோ தக்காளி, ரூ.45- 50க்கு விற்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ 20-க்கும், சில இடங்களில் ரூ. 30 மற்றும் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் முதல் ரக தக்காளி ரூ. 50க்கும், 2ம் ரக தக்காளி ரூ.30-40க்கும், மூன்றாம் ரக தக்காளி விலை ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.