Rain Alert: 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் கனமழை

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களுக்கு ஆபாய எச்சரிக்கை

தென் தமிழகத்தில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாகவும், கேரளா, முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் தொடர்ந்து வைகை அணைக்கு திறந்து விடுவதன் காரணமாகவும் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் கரையோரத்தில் இருக்கும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஊர்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.