கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு – அரசு மருத்துவமனை விளக்கம்!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்தகீா் – அஜிஸா தம்பதிக்கு முஹம்மது மாஹிர் என்ற குறைமாதக் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தலையில் நீர்கோர்த்தல் பிரச்சனை இருந்ததால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டிய தேவை இருந்ததால், குழந்தைக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட வலது கை கருமையாக மாறியதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகிய நிலையில் அகற்றப்பட்டது. குழந்தையின் வலது கை அகற்றட்டப்பட்டதாகவும், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து, இந்த விவாகரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.  இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் உயிரிழந்தது.

தற்போது, எதனால் குழந்தை உயிரிழந்தது என்பது தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாக்டீரியா தொற்றினால் ரத்தத்தில் நச்சுகள் கலந்த குழந்தை பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு உயர்தர சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாகவே, குழந்தையை காப்பாற்ற இயலவில்லை  என குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தங்கியிருந்த காலம் முழுவதும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழுவினர் மற்றும் நிர்வாகிகளால் தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வந்த போதிலும், குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.42 மணிக்கு உயிரிழந்தது என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.