ஐஸ்கிரீமில் கிடந்த விரல் யாருடையது? போலீசார் விசாரணையில் திருப்புமுனை…

Ice Cream [File Image]

மும்பை : ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் விசாரணையில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதாவது, மும்பை மலாட் பகுதியில் கடந்த வாரம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்ததை கண்டு பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

இதனையடுத்து, அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், யம்மோ (Yummo) ஐஸ்கிரீம் நிறுவனம் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல் எப்படி வந்திருக்க முடியும் என்று, விரல் கிடந்த ஐஸ்கிரீம் மாதிரி தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைத்து, மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தற்பொழுது, அது யாருடைய விரல்? என்கிற பெரிய கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய ஒரு திருப்புமுனையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆம், புனேயில் உள்ள யம்மோ ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு விரலில் காயம் ஏற்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, ஐஸ்கிரீமில் கைவிரல் துண்டு கண்டெடுக்கப்பட்ட நாளும், இவரது விரலில் அடிபட்ட நாளும் ஒரே நாள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், போலீசார்  ஐஸ்க்ரீமுக்குள் மனித விரலின் டிஎன்ஏ-யும் அந்த நபரின் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், அந்த சோதனை அறிக்கை வந்த பிறகே விரல் ஊழியர்களுடையதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.