சீனாவின் சுவாச நோய்த்தொற்று.. இந்தியாவில் 6 மாநிலங்களில் எச்சரிக்கை!

சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு புது வகையான காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இந்த புதிய வகையான காய்ச்சல் என்பது சுவாச நோய் தொற்று என கூறப்பட்டது. சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது.

இந்தப் புதிய நோய் பாதிப்புகள் குறித்து சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டது. இதற்கு விளக்கமளித்த சீன சுகாதரத்துறை அமைப்பு,  சுவாச நோய்த்தொற்று அதிகரிப்புக்கும், காய்ச்சலுக்கும் தொடா்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இப்போது அதிகமாக பரவி வரும் சுவாச நோய் என்பது பருவகால சுவாச நோய் என்றும் இது வழக்கமான எண்ணிக்கையை விட சற்று அதிகம் எனவும் கூறியதாக தகவல் வெளியானது.

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

இருப்பினும், புதியதாக எந்த வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்தது. ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க் கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்கள் தான் அதிகரித்துள்ளன என்று சீனா விளக்கமளித்தது. இந்த சூழலில், சீனாவில் ஏற்பட்டுள்ள சுவாச நோய் தொற்று மீது இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சீனாவில் குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய் தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவில் குறைந்தது 6 மாநிலங்கள் எச்சரிக்கை நிலையில் உள்ளன என கூறப்படுகிறது. அதன்படி, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுவாசக் கோளாறுகள் என வரும் நோயாளிகளை சமாளிக்கத் தயாராக இருக்குமாறு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பருவகால காய்ச்சலின் ஆபத்து குறித்த காரணிகள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைகளை பட்டியலிடும்போது, பருவகால காய்ச்சலைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கர்நாடகா கேட்டுக் கொண்டுள்ளது. இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும், அடிக்கடி கைகளை கழுவவும், முகத்தை தொடுவதை தவிர்க்கவும், நெரிசலான இடங்களை தவிர்க்க வேண்டும் அல்லது முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இணைய மோசடி.. சட்டவிரோத நடவடிக்கைகள்… 70 லட்சம் மொபைல் நம்பர்கள் முடக்கம்.!

ராஜஸ்தான் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமை தற்போது கவலைக்கிடமாக இல்லை. ஆனால், மருத்துவ ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். குழந்தைகள் பிரிவுகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உத்தரகாண்டின் சாமோலி, உத்தர்காஷி மற்றும் பித்தோராகர் ஆகிய மூன்று மாவட்டங்கள் சீனாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்வதால் சுவாச நோய்களுக்கான கண்காணிப்பை அதிகரிக்க உத்தரகாண்ட் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, தமிழகமும் தயார் நிலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  மாநிலத்தில் குழந்தை நிமோனியா வழக்குகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், சீனாவின் தற்போதைய இன்ஃப்ளூயன்ஸா சூழ்நிலையிலிருந்து வெளிப்படும் எந்தவொரு அவசரநிலைக்கும் இந்தியா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டில் உள்ள குழந்தைகளில் H9N2 மற்றும் சுவாச நோய்த்தொற்று பாதிப்புகள் குறித்து கண்காணித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்