மீண்டும் ஊரடங்கா? கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாதிப்பு என்கிற நிலை கவலையளிக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தவறாமல் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருமணங்கள், பிறந்தநாள் விழா, இறுதி சடங்கு போன்றவைகள் நோய் பரவ காரணமாக இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை. பொது மக்களிடையே பெரும் கொரோனா பரவாது என்று அலட்சியம் இருக்கிறது.

அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனுமதி வழங்கப்பட்டவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அரசியல் கூட்டங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் எந்த கூட்டங்களும் நடத்த கூடாது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று சவாலாக உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் 16 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு, 20 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. நோய் தொற்று குறைவாக உள்ளவர்கள் வீட்டு தனிமை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்