#Chandrayaan3: நாளை உயிர்பெறுமா சந்திரயான் 3? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நாளை மீண்டும் உயிர்பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த நாடும் காத்திருக்கிறது. ஆனால், அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளை சுற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி, இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்தது.

விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கி பல தகவலை பூமிக்கு அனுப்பியது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு தனது பணியை நிறைவு செய்தது.

இதனையடுத்து, பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்லீப் மோடுக்கு செல்வதற்கு முன், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவில் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்து விட்டது.

தற்போது, நிலவில் ஸ்லீப் மோடில் இருக்கும் அந்த 14 நாட்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை மீண்டும் ஆய்வு மேற்கொள்வதை காண ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் காத்திருக்கிறது. சிவசக்தி புள்ளியில் நிலவிய -200°C கடுங்குளிர் காரணமாக கடந்த 2ம் தேதி அணைத்து வைக்கப்பட்ட ரோவர் மீது தற்போது மீண்டும் வெயில் படர தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சூரிய ஆற்றலை பெறும் அதனை செயல்பட வைக்கும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நாளை (செப்டம்பர் 22-ஆம் தேதி) ரோவரும், லேண்டரும் மீண்டும் செயல்படும் என்று இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதனை இயக்கும் பணி நாளை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை மீண்டும் உயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என கூறப்படுகிறது. அப்படி அது சாத்தியமானால், அது இந்தியாவுக்கு சந்திரயான்-3யின் நிலவு பயணத்திற்கான கூடுதல் போனஸாக அமையும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.