ரெட் அலர்ட் எதிரொலி : இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
ரெட் அலர்ட் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, ஓரிரு இடங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்து வருகிறது. அந்த வகையில், திருநள்ளார், சேத்தூர், நெடுங்காடு, திருப்பட்டினம், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக, ரெட் அலர்ட் போன்ற மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டால், முதல் நாள் இரவே விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு முதல் மாவட்டமாக நாகை மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி மாவட்ட காரைக்கால் பகுதி பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (26.11.2024) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மாணவர்கள் லீவ் இருக்கா, இல்லையா என குழப்பமடைந்துள்ளனர். அதுமட்டும் இல்லமல், மழையில் நினைந்தபடி பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.