எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி? தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!
வங்கக்கடலில் நவ.23-ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, நாளை மறுநாள் (23-ஆம் தேதி) வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதனால், இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை பாதிப்பை பொறுத்து தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், பள்ளிகள் வழக்கம் செயல்படும் என்று நெல்லை, தூத்துக்குடி ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கொட்டி தீர்த்த மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41.1சென்டிமீட்டர் மழை பதிவு எனத் தகவல் மேலும் தங்கச்சிமடத்தில் 32.2 சென்டிமீட்டர் மண்டபத்தில் 26.1 சென்டிமீட்டர் பாம்பனில் 27 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.