4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!
மார்ச் 11ஆம் தேதி நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது மழை பெய்வது குறித்த அப்டேட் வெளியாகி மக்களை லேசாக மகிழ்வித்து வருகிறது. நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுளது.
நாளை (மார்ச் 10) முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், மார்ச் 11ஆம் தேதியன்று விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என கூறப்படுகிறது.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மார்ச் 11இல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மார்ச் 10ஆம் தேதி தமிழக கடற்கரையோர மாவட்டங்களிலும், மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.