இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை.. 21 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 21 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (22.05.2024) கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் 21 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (மே 23ம் தேதி )தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.