நாளை காலை புயல்? இந்திய வானிலை ஆய்வு முக்கிய தகவல்!
சென்னை : இந்தாண்டின் 2வது புயல் நாளை உருவாகும், அந்த புயலுக்கு ASNA என பெயரிடப்படும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேளையில், கட்ச் மற்றும் அதனை ஒட்டிய செளராஷ்ட்ரா பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் இந்திய கடற்கரை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை உருவாக வாய்ப்பு
சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து, நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தகவல் தெரிவித்துள்ளது.
இரண்டாவது புயல்
கடந்த மே மாதம் வங்க கடலில் ‘ரிமால்’ புயல் உருவான நிலையில், இந்தாண்டின் 2-ஆவது புயலாக இது உருவாக வாய்ப்பு உள்ளது. அப்படி, புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
கேரளா – கர்நாடகாவில் மழை
கேரளாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும், நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.