விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை..! தமிழகத்தில் இன்னும் மழை நீடிக்க வாய்ப்பு.!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுக்க மிதமான மழை பெய்தது.
வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலும் கூடிய மழை பெய்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கேகே நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் என பல்வேறு பகுதிகளின் மிதமான மழை பெய்தது.
மேலும், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்று வீசியதால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
அதேபோல் திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. மேலும், இன்னும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் வரும் ஜூலை 18ஆம் தேதி வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.